General02 September 2026

தலவத்துகொடையில் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், தங்க நகைகள் கொள்ளை – நால்வரைத் தேடும் காவல்துறை

தலவத்துகொடை பகுதியில் உள்ள  வானூர்தி பயணச்சீட்டு மற்றும் விசா சேவை வழங்கும் நிறுவனமொன்றில் இடம்பெற்ற 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் குறித்த நிறுவனத்திற்குள் நுழைந்த நால்வர், நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூர்மையான ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை நிற சிற்றூந்தில் வந்த குறித்த நபர்கள் முகங்களை மூடியிருந்ததாகவும், சம்பவத்தைத் தொடர்ந்து அதே சிற்றூந்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளைச் சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் ஊழியர் ஒருவரைத் தாக்கிய காட்சிகளும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிறுவனத்தில் இருந்த சுமார் 6 கோடி ரூபாய் பணத்துடன், நிறுவன உரிமையாளர் அணிந்திருந்த நான்கு தங்கச் சங்கிலிகள் மற்றும் மூன்று தங்க மோதிரங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes