அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு (திருத்த) சட்டமூலம் ஆகியவற்றைச் சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று உயர்நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளன.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய ஐந்து நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற ஆயம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
சட்டமா அதிபர் தரப்பு வாதங்கள்
இந்த வழக்கில் அரச தரப்பில் முன்னிலையான மன்றாடியார் நாயகர் விராஜ் தயாரத்ன, நாட்டின் நீதித்துறை அமைப்பின் விரிவாக்கம் மற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தத் திருத்தம் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைப்பதாகவே அமைவதோடு, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கவில்லை.
அரச சேவை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை (60 ஆண்டுகள்) விட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரலாற்று ரீதியாகவே அதிகமாக இருந்துள்ளது. அமெரிக்கா (ஆயுட்காலம் வரை) மற்றும் பிரித்தானியா (75 ஆண்டுகள்) போன்ற சர்வதேச நடைமுறைகளைச் சுட்டிக்காட்டிய அவர், ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்றார்.
மனுதாரர்கள் மற்றும் இடைமனுதாரர்கள் தரப்பு வாதங்கள்
மனுதாரர் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நைஜல் ஹட்ச், இடைமனுதாரர்களான நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் மற்றும் சட்டத்தரணி நிரஞ்சன் அருள்பிரகாசம் ஆகியோர் பின்வரும் வாதங்களை முன்வைத்தனர்.
20ஆவது திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போது அது மக்கள் தீர்ப்புக்கு (Referendum) உட்படுத்தப்படவில்லை. இலங்கையில் மக்களின் சராசரி ஆயுட்காலம் (ஆண்களுக்கு 77, பெண்களுக்கு 81) அதிகரித்துள்ள நிலையைக் கருத்திற் கொண்டு, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது காலத்திற்கு ஏற்ற நியாயமான நடவடிக்கையாகும்.
சர்வதேச ரீதியில் கனடா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் 70 முதல் 75 வயது வரை ஓய்வுபெறும் எல்லை உள்ளதால், இதற்கு மக்கள் தீர்ப்பு அவசியமில்லை என வாதாடினர்.
இறுதி முடிவு
வாதங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மனுதாரர்கள் தங்கள் பதில் வாதங்களை நாளை (இன்று) பிற்பகல் 3 மணிக்கு முன் தாக்கல் செய்யுமாறு ஆயம் உத்தரவிட்டது.
அதன்பிறகு, மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் (இரகசிய தீர்மானம்) உரிய நேரத்தில் நாடாளுமன்ற சபாநாயகருக்குத் தெரிவிக்கப்படும் என்று பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன அறிவித்தார்.
அடுத்து என்ன நடக்கவுள்ளது?
அனைத்துத் தரப்பினரும் தங்களது இறுதி எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை இன்று (3) பிற்பகல் 3 மணிக்கு முன்னர் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
எழுத்துப்பூர்வ அறிக்கைகளைப் பரிசீலித்த பின்னர், 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் (ரகசியத் தீர்மானம்) நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும்.
சபாநாயகர் அந்தத் தீர்மானத்தைப் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே, இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமானதா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) அவசியமா என்பது உறுதியாகும்.
Latest News
22ஆவது திருத்தச்சட்ட மூல வழக்கு விசாரணை குறித்து பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி
எல் நினோ தாக்கத்தால் வேலையிழப்போருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பரிசீலனை
கடன் சுமை 190 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கவில்லை - மறுக்கிறார் பிரதி அமைச்சர்!
அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு!
உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
பூட்டான் பிரதமருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு
பூட்டானில் சர்வதேச பிரதிநிதிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகன் கைது
2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றம்
PAYE வரிச் சுமையை உடனடியாகக் குறைக்க வேண்டும் - ஜனாதிபதி செயலாளர்!