General10 September 2026

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் விசேட சான்றிதழ்

மலேரியா நோயற்ற நிலையைத் தொடர்ந்து பேணி வருவதுடன், ரணஜன்னி அல்லது ஏற்புவலி (Tetanus) நோயை வெற்றிகரமாக ஒழித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பால் (WHO) இலங்கைக்கு விசேட சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

திமோர்-லெஸ்டேவின் டிலி நகரில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது அமர்வின் போது, உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயசஸ் (Dr. Tedros Adhanom Ghebreyesus) இந்தச் சான்றிதழை சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பினால் மலேரியா அற்ற நாடாகச் சான்றிதழ் பெற்ற இலங்கை, நோய் மீண்டும் பரவுவதைத் தடுத்து இந்த நிலையைத் தொடர்ச்சியாகப் பேணி வருகிறது.

மாலைத்தீவுக்கு அடுத்தபடியாக தென்கிழக்காசிய பிராந்தியத்தில் மலேரியாவை முழுமையாக ஒழித்த இரண்டாவது நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டுள்ளது.


மேலும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நாடு தழுவிய ஏற்புவலி தடுப்பூசித் திட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம், ஏற்புவலி நோயையும் ஒரு தசாப்த காலமாக இலங்கை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.

நாட்டின் பலமான முதற்கட்ட சுகாதாரப் பாதுகாப்பு முறைமை, தேசிய அர்ப்பணிப்பு, உயர் தடுப்பூசி வழங்கல் மற்றும் சிறந்த நோய் கண்காணிப்பு வழிமுறைகளே இந்த மைல்கற்களை எட்டுவதற்குக் காரணமாக அமைந்ததாக உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

இத்தகைய சாதனைகள் இலங்கையர்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதோடு, எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும் வழிவகுத்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes