General14 September 2026

வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்: பேராபத்தில் தெற்காசிய பிராந்தியம்! - ஆய்வில் தகவல்

இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதுடன், பனிப்பாறை ஏரிகள் ஆபத்தான முறையில் விரிவடைந்து வருவதாகப் புதிய ஆய்வொன்று எச்சரித்துள்ளது.

சுற்றாடல் ஆலோசனை நிறுவனமான 'Systemiq', 'ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம்' (ICIMOD) உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இமயமலையின் தற்போதைய சூழல் குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விடத் தற்போது இமயமலைப் பனிப்பாறைகள் 65 சதவீதம் அதிவேகமாக உருகி வருகின்றன.

இமயமலை-காரகோரம் பிராந்தியத்தில் சுமார் 40,000 பனிப்பாறைகள் உள்ள போதிலும், வெறும் 21 பனிப்பாறைகள் மட்டுமே விரிவாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் 18 சதவீத நிலப்பரப்பைக் கொண்டுள்ள இமயமலைப் பகுதி, நாட்டில் நிகழும் பேரிடர்களில் 35 சதவீதத்திற்குப் பொறுப்பாக அமைகின்றது.

இதில் இந்தியாவில் உள்ள 56 பனிப்பாறை ஏரிகள் "மிகவும் ஆபத்தானவை" என அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இமயமலையின் நீர் ஆதாரமானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 20 சதவீதத்துக்குப் பங்களிக்கிறது.

எனினும், நடப்பு நூற்றாண்டின் நடுப்பகுதியை எட்டும்போது பனிப்பாறைகளின் நீர்வரத்து உச்சத்தை அடைந்து, அதன் பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதற்கு மூன்றில் ஒரு பங்கு 'கரிமக் கார்பன்' (Black carbon) மாசுபாடே முக்கிய காரணமாக அமைகிறது.

செங்கல் சூளைகள் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் இந்த மாசு, பனியின் மீது படிந்து சூரிய வெப்பத்தை அதிகளவில் ஈர்த்து பனி உருகுவதை விரைவுபடுத்துகிறது.

நேபாளம் மற்றும் திபெத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவங்கள் இந்த அபாயத்தை உணர்த்துகின்றன.

எனவே, எல்லை கடந்த பனிப்பாறை கண்காணிப்பு, இயற்கை பேரழிவு எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தெற்காசிய நாடுகள் உடனடியாக ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes