General18 September 2026

62 இலட்சம் பெண்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் - குடும்பப் பொறுப்புக்களே முக்கிய காரணம் என ஆய்வில் தகவல்!

நாட்டில் வேலை செய்யும் வயதிலுள்ள சுமார் 62 இலட்சம் பெண்கள் எந்தவித வேலைவாய்ப்பும் இன்றி வீடுகளில் உள்ளதாக இன்றைய தினம் (18) வெளியான தேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களில் 58.1 சதவீதமானோர் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை எனக் கூறுவதற்குக் குடும்பப் பொறுப்புக்களும், வீட்டு வேலைகளுமே முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

25 - 34 வயதுப் பிரிவைச் சேர்ந்த வேலைவாய்ப்பில்லாத பெண்களில் 87 சதவீதமானோர், குடும்பப் பொறுப்புகள் காரணமாகவே வேலைக்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல் 35 - 54 வயதுப் பிரிவைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற பெண்களில் 93.6 சதவீதமானோரும் இதே காரணத்தையே சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெண்களுக்கு வேலை செய்யும் விருப்பம் இல்லை என்பதால் அவர்கள் வேலைக்குச் செல்வதில்லை என்று அர்த்தமல்ல என ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மாறாக, சமையல் செய்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், துணி துவைத்தல், குழந்தைகளைப் பராமரித்தல், முதியோர் மற்றும் நோயாளிகளைக் கவனித்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளுக்காகத் தமது நாளாந்த வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட நேர்வதே இதற்குக் காரணம் என அந்த அமைப்பு விளக்கியுள்ளது.

வேலைவாய்ப்பில்லாத 62 இலட்சம் பெண்களில், 17.8 சதவீதமானோர் உயர்கல்வி கற்கும் நோக்கில் வேலைவாய்ப்பை நாடவில்லை எனவும், 16 சதவீதமானோர் ஓய்வூதிய வயதைக் கடந்தவர்கள் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, 6.6 சதவீதமானோர் நோய் நிலைமைகள் அல்லது உடல்நிலை பாதிப்பு காரணமாக வேலைவாய்ப்புகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes