General19 September 2026

சவூதி நீதிமன்றத்தில் இலங்கை பிரஜை: நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

சவூதி அரேபியாவில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை, இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாகவும், கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்துடன் ஒருங்கிணைந்தும், இந்த வழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவூதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அனோஜன் சிவராசாவின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அனோஜன் சிவராசா தொடர்பான வழக்கு தற்போது சவூதி அரேபியாவில் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes