General23 September 2026

மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகளின் வழித்தட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைந்து வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தினால் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பேருந்துகளின் இயங்குதிறன் மற்றும் வாகனப் புகை வெளியேற்றம் தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனை செய்யப்பட்ட 59 பேருந்துகளில் 39 பேருந்துகளுக்கு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகல் நேரங்களில் சேவையில் ஈடுபடாததால் வழக்கமான பரிசோதனைகளில் இருந்து தவறும் பேருந்துகளை இலக்காகக் கொண்டு இந்த விசேட இரவு நேரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி பகுதியில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் இயங்குதிறனைப் பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டமும் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், சேவையில் ஈடுபடுவதற்குத் தகுதியற்ற பேருந்துகளை அடையாளம் காண்பதே இந்த விசேட பரிசோதனைகளின் பிரதான நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes