Entertainment14 July 2026

வீடுகளை முற்றுகையிடும் லட்சக்கணக்கான பூச்சிகள்; அச்சத்தில் பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து வருவதால், அந்தப் பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: "கடந்த சில நாட்களாகக் கடைகள் மற்றும் வீடுகளில் சிறிய ரக கருப்பு ஈக்கள் போன்ற பூச்சிகள் லட்சக்கணக்கில் படையெடுத்து வருகின்றன. இவை உணவுப் பொருட்களைப் பாழாக்குவதுடன், மின் விளக்குகளைச் சுற்றி வட்டமிட்டு கண், காது மற்றும் மூக்கிற்குள் புகுந்து மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகின்றன.

குழந்தைகளுடன் வீடுகளில் வசிக்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வெள்ளைத் தாள்களில் எண்ணெய் தடவி இவற்றைக் கட்டுப்படுத்த முயன்றும் பலனில்லை. எனவே, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, பூச்சிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, "பூச்சியியல் நிபுணர்களை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

பூச்சிகளின் இனம் மற்றும் இந்தத் திடீர் வருகைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்த பிறகு விரிவான விளக்கம் அளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes