Sports04 June 2026

முடிவுக்கு வருகிறதா சூர்யகுமார் யாதவின் தலைமைத்துவக் காலம்?

இந்திய இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் நீக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது தலைமையில் இந்திய அணி இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் 2026 ஐ வென்று மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், இந்த அதிரடி முடிவு எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

தலைவர் பதவி மட்டுமன்றி, இருபதுக்கு 20 அணியில் அவரது இடம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய அணி விபரங்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில் இச்செய்தி கசிந்துள்ளது.

2028 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை இலக்காகக் கொண்டு, எதிர்கால அணியைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) புதிய தலைவர் ஒருவரைத் தேடி வருவதாகக் கூறப்படுகின்றது.

சூர்யகுமார் யாதவின் சமீபத்திய விளையாட்டில் உள்ள பின்னடைவே பிசிசிஐயின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக அவர் 113 டி20 போட்டிகளில் விளையாடி 3,272 ஓட்டங்களை குவித்துள்ளார். எனினும், அண்மைக்காலமாக அவரது புள்ளிவிபரங்கள் சரிவைச் சந்தித்துள்ளன.

2024 ஜூலையில் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் 43.60 ஆக இருந்த அவரது ஓட்டச் சராசரி, அணித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் 25.88 ஆகக் குறைந்துள்ளது.

தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அவர் 6 அரைச்சதங்களைப் பெற்றுள்ள போதிலும், 4 தடவைகள் ஓட்டங்கள் எதுவும் பெறாமலும் ஆட்டமிழந்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2026 தொடரிலும் 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய சூர்யகுமார், 20.76 என்ற குறைந்த சராசரியுடன் 270 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.

ஆட்டத்திறன் வீழ்ச்சியடைந்த போதிலும், அவரது தலைமையில் இந்திய அணி பல முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. சூர்யகுமார் யாதவின் தலைமையின் கீழ் இந்திய அணி 2025 ஆசியக் கிண்ணம் மற்றும் 2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 2023 ஆசியக் கிண்ணம் மற்றும் 2024 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிகளிலும் அவர் அங்கத்தவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes