போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய சோதனைகளின் விபரங்களை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை 226 பில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நீதிமன்ற மற்றும் பாதுகாப்புத் துறையினருக்குள் மறைந்திருந்த சில ஊழல்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 54,000 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கை 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் தீவிரமாகத் தொடர்ந்ததால், மொத்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு 226,447 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பெரும்பாலும் கடல் எல்லைகளிலேயே இவை முறியடிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் சான்றுப் பொருட்கள் வைப்பறையில் இருந்த 750 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை, அங்கிருந்த அதிகாரியே திருடி விற்ற சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த 2025 ஜூலை 28 அன்று அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர், சோதனையின் கீழ் தன் வசம் வைக்கப்பட்டிருந்த 250 கிராம் "ஐஸ்" போதைப்பொருளை மீண்டும் விற்பனைக்காகக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டதாக அமைச்சர் அதிரடி தகவலை வெளியிட்டார்.
போதைப்பொருள் வலையமைப்பை ஒழிப்பதற்காகத் தகவலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வலையமைப்பை ஒழிப்பதற்காகத் தகவலாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடத்தல்காரர்கள் பற்றிய விபரங்களை வழங்கிய பொதுமக்கள் மற்றும் சோதனைகளில் ஈடுபட்ட காவல்துறையினர் , கடற்படையினருக்கு 785 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை பணப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நீதிமன்ற தீர்ப்புகளுக்காகக் காத்திருக்கும் 8,554 கிலோகிராம் போதைப்பொருட்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் நான்கு பூட்டுகளைக் கொண்ட இரும்புப் பட்டிகளால் மூடப்பட்ட அறைகளில் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். உயர் நீதிமன்ற வழக்குகள் நிறைவடைந்தவுடன் இவை அனைத்தும் புத்தளத்தில் உள்ள உலைகளில் முழுமையாக எரிக்கப்பட்டு அழிக்கப்படும் என அமைச்சர் விஜயபால உறுதியளித்தார்.








