Sports09 June 2026

மூன்றாவது போட்டியும் கைவிடப்பட்டது: ஒருநாள் தொடர் இலங்கை வசமானது!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டுள்ளது.

அதன்படி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறவிருந்த இறுதிப் போட்டி, மழையின் குறுக்கீடு காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.

முன்னதாக நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்ததுடன், இரண்டாவது போட்டியும் மழையினால் கைவிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, மூன்றாவது போட்டி கைவிடப்பட்டதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் ஒருநாள் தொடரொன்றைக் கைப்பற்றிய மூன்றாவது இலங்கை அணித் தலைவர் என்ற பெருமையை குசல் மெண்டிஸ் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் அர்ஜுன ரணதுங்க மற்றும் மாவன் அத்தபத்து ஆகிய இருவர் மட்டுமே இந்தச் சாதனையைப் புரிந்திருந்தனர்.

அதேநேரம், 23 வருடங்களின் பின்னர் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் மண்ணில் தொடரொன்றை வென்றுள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.

அத்துடன், இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் காரி கிர்ஸ்டன் (Gary Kirsten) மற்றும் தலைவர் குசல் மெண்டிஸ் கூட்டணியின் கீழ் இலங்கை அணி பெற்றுக்கொண்ட முதலாவது தொடர் வெற்றி இதுவாகும்.

வெற்றிக்கிண்ணத்தை இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் உள்ளக அரங்கில் பெற்றுக்கொண்டதுடன், சிறியளவிலான கொண்டாட்டமும் இடம்பெற்றது.

ஒருநாள் தொடரைத் தன்வசப்படுத்தியுள்ள இலங்கை அணி, அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் மோதவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes