General09 June 2026

சுகாதார அமைச்சில் 237 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு: நேர்முகப்பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

நாட்டின் இலவச சுகாதார சேவையின் மனிதவளத் தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், அரச சுகாதார முகாமைத்துவ உதவிச் சேவையின் தரம் III க்கான 237 பேரைக் கொண்ட இரண்டாவது குழுவினரை இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதோடு, இதன் மூலம் சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள மருத்துவமனைகள், நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த நியமனங்களுக்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் கடந்த 2025.08.31 அன்று நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, குறித்த எழுத்துப் பரீட்சையில் 141 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகப்பரீட்சை அழைப்புக் கடிதங்கள் தற்போது பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விபரங்களைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும்.

இந்த சுகாதார முகாமைத்துவ உதவிப் பணிக்காக 213 பேரைக் கொண்ட முதலாவது குழுவினர் கடந்த ஜனவரி மாதத்தில் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த இரண்டாவது குழுவினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes