International11 June 2026

குடிநீர் உள்கட்டமைப்பு மீதான அமெரிக்கத் தாக்குதல் ‘திட்டமிடப்பட்ட போர்க்குற்றம்’: ஈரான் சாடல்

ஈரானின் தென்பகுதி ஹோர்முஸ்கான் (Hormozgan) மாகாணத்திலுள்ள சிரிக் (Sirik) துறைமுக நகரில் அமைந்துள்ள பொதுமக்களின் குடிநீர் உள்கட்டமைப்பை அமெரிக்க இராணுவம் "திட்டமிட்டு" தாக்கியுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் எஸ்மைல் பகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதலினால் 10 கிராமங்களைச் சேர்ந்த 20,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு குடிநீர் வழங்கி வந்த இரண்டு பிரதான நீர்த்தேக்கங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இது தற்செயலாக ஏற்பட்ட பக்கவிளைவுச் சேதம் அல்ல. இது திட்டமிடப்பட்ட ஒரு போர்க்குற்றமாகும். அத்துடன், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் ஒரு செயலாகும்" என்று சாடியுள்ளார்.

பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமான உள்கட்டமைப்புகள் மீது இவ்வாறான முறையான, கொடூரமான தாக்குதல்களை நடத்தியதற்காக அமெரிக்கா தகுந்த முறையில் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes