International10 July 2026

பண்ணைகளில் இருந்து தப்பியோடிய ராஜநாகங்கள்!

சீனாவின் குவாங்சி (Guangxi) பிராந்தியத்தில் பெய்து வரும் மிகக் கடுமையான மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்குக்கு மத்தியில், பண்ணைகளில் இருந்து தப்பியோடிய நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

பாரம்பரிய மருத்துவத் தேவைகளுக்காகச் சுமார் 30 மில்லியன் பாம்புகள் வளர்க்கப்படும் சீனாவின் மிகப்பெரிய பாம்பு வளர்ப்பு மையமான குவாங்சியில், தற்போதைய வெள்ளத்தினால் கோப்ரா (Cobra) உள்ளிட்ட 900க்கும் மேற்பட்ட கொடிய விஷமுள்ள பாம்புகள் பண்ணைகளில் இருந்து தப்பியோடி வெள்ள நீரில் மிதந்து வருவதாக சீன ஊடகங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.

வெள்ளத்தினால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பாம்புகளைப் பிடிப்பதற்காக விசேட மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பாம்புக்கடிக்குள்ளாகுபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காகத் தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பயங்கர புயல் மற்றும் வெள்ளப் பெருக்கினால் அணைகள் உடைந்ததில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், வெள்ளப் பாதிப்பினால் பன்றிப் பண்ணைகள், மல்லிகைத் தோட்டங்கள் மற்றும் மர உற்பத்திப் பிரிவுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், உள்ளூர் மிருகக்காட்சி சாலை ஒன்றிலிருந்து வரிக்குதிரைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகளும் தப்பியோடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes