General25 July 2026

வங்கக்கடலில் 36 நாட்கள் தவித்த இலங்கை கடற்றொழிலாளர் இருவர் உயிருடன் மீட்பு!

வங்காள விரிகுடாவில் சுமார் 36 நாட்களாகத் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த இரு கடற்றொழிலாளர்கள், பங்களாதேஷின் கொக்ஸ் பஸார் (Cox's Bazar) மாவட்டத்தில் உள்ள மொஹேஷ்காலி (Moheshkhali) பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சோனாச்சர் (Sonarchar) அருகே வங்காள விரிகுடாவில் மிதந்து கொண்டிருந்த ஃபைபர் படகில் இருந்த இருவரையும், பங்களாதேஷ் கடற்றொழிலாளர்கள் குழு கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அவதானித்துள்ளது.

இதனையடுத்து, உடனடியாக குறித்த இருவரையும் தங்களது படகுக்கு மாற்றிய அவர்கள், பங்களாதேஷின் மொஹேஷ்காலி கரைக்கு அழைத்து வந்தனர்.

மீட்கப்பட்டவர்கள் இலங்கையின் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த எஸ்.எச். சமிந்த (51) என்பவரும், 30 வயதுடைய அவருடைய மகனும் என மொஹேஷ்காலி காவல்துறையின் தலைமை அதிகாரி முஜிபுர் ரஹ்மானை மேற்கோள்காட்டி பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடற்றொழிலுக்குச் சென்றபோது திசைமாறி, கடந்த 36 நாட்களாக உணவும் குடிநீரும் இன்றித் தவித்ததாகவும், பச்சை மீன்களைப் பிடித்து உண்டே தாங்கள் உயிர் பிழைத்ததாகவும் அவர்கள், தங்களை மீட்ட குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இவர்கள் கடலில் எவ்வாறு திசைமாறினார்கள், உண்மையிலேயே 36 நாட்கள் கடலில் இருந்தனரா என்பது குறித்தும், அவர்களின் அடையாளங்கள் குறித்தும் மொஹேஷ்காலி காவல்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்த்து வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகப் பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related recommendation
Hiru TV News | Programmes