General30 July 2026

இந்திய நாடாளுமன்ற விவாதத்தில் 'Gen Z' வார்த்தைகளை பயன்படுத்திய எம்பி-க்கள்!

இந்தியாவில் பரீட்சை முறைகேடுகளுக்கு எதிராக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருநது விலகினார்.

இதனைத் தொடர்ந்து, பரீட்சை முறைகேடு தடுப்பு சட்டமூலம் மீதான நாடாளுமன்ற மக்களவை விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 'Gen Z' தலைமுறையினர் பயன்படுத்தும் இணையக் கலைச்சொற்களைப் (Slang) பரவலாகப் பயன்படுத்தியுள்ளனர்.

அதன்படி, சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் எதிர்க்கட்சிகளைக் விமர்சிக்க 'Delulu' (யதார்த்தத்திற்குப் புறம்பான கற்பனை) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர்.

அத்துடன், எதிர்க்கட்சியினர் 'FOMO' (Fear Of Missing Out - வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்ற பயம்) மனநிலையில் இருப்பதாக ஸ்ரீகாந்த் ஷிண்டே குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த சட்டமூலத்தைக் கொண்டு வந்ததன் மூலம் சரியான தீர்வை எட்டியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்ட பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பான்சுரி சுவராஜ் 'Clock it' (சரியாகக் கணித்தல் / தீர்வை அறிதல்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

அதேநேரம், எதிர்க்கட்சியினரின் வருகையின்மையை சுட்டிக்காட்ட 'MIA' (Missing In Action - தலைமறைவாதல்) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் தீபேந்தர் சிங் ஹூடா, போராட்டத்தின் போது வைரலான "waste-guna-huiya" என்ற இணைய மீம் (Meme) வாசகத்தைக் குறிப்பிட்டு அரசாங்கத்தைக் கிண்டல் செய்தார்.

ஆரம்பத்தில் "நாம் ஏன் Gen Z தலைமுறையின் மொழியைப் பேச வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலேவும், பின்னர் "Delulu" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

இதேவேளை, அரசியல்வாதிகள் வாக்காளர்களைக் கவர மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சினிமா மற்றும் விளையாட்டுச் சொற்களைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான் என கொள்கை ஆராய்ச்சி மையத்தின் (CPR) அரசியல் ஆய்வாளர் ராகுல் வர்மா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் டிஜிட்டல் மானுடவியலாளர் பயல் அரோரா குறிப்பிடுகையில், "இளைஞர்களின் மொழியைப் பேசுவது கலாசார விழிப்புணர்வைக் காட்டுமே தவிர, அதுவே அரசியல் மாற்றமாகிவிடாது" எனக் கூறியுள்ளார்.

அத்துடன், அரசியல்வாதிகள் Gen Z மொழியைப் பேசுவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், "நாங்கள் அவர்களிடம் எங்களைப் போலப் பேசுமாறு கேட்கவில்லை; எங்கள் கோரிக்கைகளைச் செவிமடுக்குமாறுதான் கேட்டோம். உண்மையான மாற்றம் இல்லாமல் வெறுமனே எங்கள் மொழியை நகலெடுப்பது (Cringe) எங்களைக் கவராது" எனத் தெரிவித்துள்ளனர்.

Related recommendation
Hiru TV News | Programmes