General12 August 2026

வட்டி வீதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை: இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தகவல்

கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட எதிர்பாராத வட்டி வீத அதிகரிப்புக்குப் பிறகு, இந்த ஆண்டில் வட்டி வீதங்களை மேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பணவீக்கம்,அடுத்த ஆண்டில் இலக்கு வைக்கப்பட்ட 5 சதவீதத்தை நோக்கி குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போரினால் ஏற்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மே மாதத்தில் மத்திய வங்கி 100 அடிப்படைப் புள்ளிகளால் வட்டி வீதத்தை உயர்த்தியது.

இது மூன்று ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதல் வட்டி வீத அதிகரிப்பாகும்.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் மீண்டெழுந்து வரும் பொருளாதாரத்தை இந்த நடவடிக்கை பாதிக்கும் என பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

பணவீக்கம் 7 சதவீதம் வரை உயரும் என மத்திய வங்கி எதிர்பார்த்ததால், மே மாத வட்டி வீத உயர்வு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே எடுக்கப்பட்டது.

எனினும் தற்போதைய பணவீக்கம் எதிர்பார்த்த வரம்பிற்குள்ளேயே உள்ளது.

இந்தநிலையில் எரிபொருள் விலைகளின் உயர்வால் ஜூலை மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 7.3 சதவீதமாக உயர்ந்தது.

இது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய அதிகரிப்பாகும்.

இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இது 8 சதவீதம் வரை உயரக்கூடும் என சில பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அத்துடன் கடந்த மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வட்டி வீத உயர்வின் முழுமையான தாக்கம் பொருளாதாரத்தில் பிரதிபலிக்க 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும்.

எனினும் அடுத்த ஆண்டின் முதற்பாதியில் பணவீக்கம் மீண்டும் 5 சதவீத இலக்கை அடையும்.

அபிவிருத்தியை பாதிக்காமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி முயல்வதால், கொள்கை வட்டி வீதத்தை 8.75 சதவீதத்திலேயே நிலையாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த வட்டி வீத அறிவிப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக மத்திய வங்கியி;ன் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் 5 சதவீத வளர்ச்சியைக் கண்டது.

2026 ஆம் ஆண்டிலும் இதே போன்ற வளர்ச்சியை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், உலகளாவிய நெருக்கடிகளால் வளர்ச்சி சற்று குறையக்கூடும் என பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், எதிர்கால வளர்ச்சிக்குக் குறைந்த பணவீக்கமே அத்தியாவசியமானது எனக் குறிப்பிட்டுள்ள ஆளுநர், நாட்டின் வளர்ச்சி 4 முதல் 5 சதவீத வரம்பிற்குள் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், இலங்கை மத்திய வங்கியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தனது 2.9 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் 695 மில்லியன் டொலர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

அதேநேரம், தற்போதைய 6.6 பில்லியன் டொலராக உள்ள அந்நியச் செலாவணி கையிருப்பை இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 8 பில்லியன் டொலராக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு செயற்படுவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes