Sports15 August 2026

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவு!

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் தேவ்தட் படிக்கல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதன்படி, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதற்கமைய, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

உணவு இடைவேளைக்கு பின்னர் காலநிலை மாற்றத்தினால் போட்டி தாமததாகவே ஆரம்பிக்கப்பட்டதால், முதல் நாளில் 73 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டன.

இதனிடையே, காயம் காரணமாக கே.எல். ராகுல் ‘ரிட்டையர்ட் ஹேர்ட்’ முறையில் வெளியேறினார்.

இதன்போது ராகுல் மற்றும் படிக்கல் ஜோடி 150 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்தது.

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தேவ்தட் படிக்கல், தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதலாவது சதத்தை பதிவு செய்து 131 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes