General30 January 2026

60 வீதமான போக்குவரத்து ஓட்டுநர்கள் போதைப்பொருளுக்கு அடிமை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஓட்டுநர்களில் சுமார் 60 சதவீதமானோர் பாரியளவில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 
 
கண்டியில் நடைபெற்ற விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 2,700 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 2,000 பேர் பாதசாரிகள் மற்றும் உந்துருளி ஓட்டுநர்களாவர். 
 
இவர்களில் 53 சதவீதமானோர் ஆண்கள். இந்த விபத்துக்களில் சுமார் 50 சதவீதமானவற்றிற்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் எனத் தெரியவந்துள்ளது. 
 
இவர்களில் பெரும்பாலானோர் மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. நாங்கள் பெஸ்டியன் மாவத்தையில் நடமாடும் ஆய்வகங்களைப் பயன்படுத்தி 53 பேருந்து ஓட்டுநர்களை சோதித்தோம். 
 
அதில் 10 ஓட்டுநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியானது. அதாவது 16 வீதமானோர். ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம். ஏனெனில், இந்தச் சோதனை நடைபெற்றதற்கு அடுத்த நாள் பெருமளவிலான ஓட்டுநர்கள் பணிக்கு வரவில்லை. 
 
தாங்கள் பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்திலேயே அவர்கள் பணிக்கு வரவில்லை. போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தவும், பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் பின்வரும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. 
 
இனிமேல் சாதாரண கனரக வாகன ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட முடியாது. அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு, விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். 
 
அந்த உரிமம் உள்ளவர்கள் மட்டுமே இனி பேருந்துகளை ஓட்ட முடியும். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள விரும்பும் ஓட்டுநர்களுக்கு அரசாங்கத்தினால் உரிய சிகிச்சை வழங்கப்படும். 
 
சட்டத்தை மீறிச் செயற்படும் ஓட்டுநர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
Related Recomands
Hiru TV News | Programmes