General06 February 2026

எப்ஸ்டீன் உடனான தொடர்பு - பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் பில் கேட்ஸ்!

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட நேரங்கள் குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன், அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

மறைந்த கோடீஸ்வரரான ஜெப்ரி எப்ஸ்டீன், இளம் பெண்களை பாலியல் ரீதியாக கடத்திய மற்றும் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் தண்டனை பெற்றவர்.

பில் கேட்ஸ் அவரோடு பலமுறை சந்திப்புகளை நடத்தியிருந்தமை மற்றும் அவரது விமானத்தில் பயணித்திருந்தமை தொடர்பான தகவல்கள் சமீபகாலமாக பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.

இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பில் கேட்ஸ்

அவருடன் நேரம் செலவழித்தது ஒரு மிகப்பெரிய தவறு. அதற்காக நான் வருந்துகிறேன் மற்றும் மன்னிப்பு கோருகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

உலகளாவிய சுகாதாரப் பணிகளுக்காக நிதி திரட்டும் நோக்கில், எப்ஸ்டீனிடம் இருந்த வசதி படைத்தவர்களின் தொடர்புகளைப் பயன்படுத்தவே அவரைச் சந்தித்ததாக பில் கேட்ஸ் விளக்கமளித்துள்ளார்.

அந்த சந்திப்புகள் ஊடாக தொண்டு நிறுவனங்களுக்கு நிதி கிடைக்கும் என தான் நம்பியதாகவும், ஆனால் அது தவறான முடிவாக அமைந்துவிட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

பில் கேட்ஸுக்கும் அவரது மனைவி மெலிண்டாவிற்கும் இடையிலான விவாகரத்து முடிவிலும், எப்ஸ்டீனுடனான இந்தத் தொடர்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், பில் கேட்ஸின் இந்த பகிரங்க மன்னிப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes