International30 April 2026

மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்

சர்வதேச சட்டங்களை மதித்து, பொதுமக்கள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

லெபனான் ஜனாதிபதி அவுன் இதனை வலியுறுத்தியுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்த போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

லெபனானின் தெற்குப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதன் மூலம் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது இஸ்ரேல் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவதாக ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளார்.

லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 17 பணியாளர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களும் இந்தத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மீட்புப் பணிகள் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட பின்னரும், பாதுகாப்பு கவசங்கள் அணிந்த பணியாளர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுவது சர்வதேச விதிகளை மீறும் செயல் என்றும் லெபனான் ஜனாதிபதி அவுன் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes