General04 June 2026

ட்ரம்பின் ‘போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம்’ நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதி இன்றி தன்னிச்சையாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான ‘போர் அதிகார தீர்மானம்’ (War Powers Resolution) அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் (House of Representatives) வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த (Republican) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருடன் (Democrats) இணைந்து வாக்களித்ததை அடுத்து, இந்தத் தீர்மானம் 215 க்கு 208 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறைவேறியது.

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் அங்கீகரிக்கப்படாத இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்தக் கோரியும், போர் பிரகடனம் செய்வதில் நாடாளுமன்றத்திற்கு இருக்கும் மேற்பார்வை அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டவும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட இந்த முயற்சி, ஜனாதிபதியின் தன்னிச்சையான அதிகாரப் போக்கிற்கு எதிரான ஒரு முக்கிய அரசியலமைப்புப் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சட்டமூலம், பிரதிநிதிகள் சபைக்கு வருவதற்கு முன்னர், அமெரிக்க செனட் சபையில் நீண்ட நாட்களாகக் கடுமையான இழுபறி நிலையில் காணப்பட்டது.

நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் போதிய ஆதரவு திரட்ட முடியாத காரணங்களால் செனட் சபையில் இதனை நிறைவேற்றுவதற்கான முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்திருந்தன.

எனினும், கடந்த வாரம் செனட் சபை இந்த தீர்மானத்தின் தனது சொந்தப் பதிப்பை ஒருவாறாக நிறைவேற்றியதை அடுத்து, அங்கு நிலவி வந்த முட்டுக்கட்டை உடைக்கப்பட்டது.

இதன் மூலமே பிரதிநிதிகள் சபையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பை நடத்துவதற்கான வழிமுறை சுமுகமாக உருவானது.

இதுவரை 29 பில்லியன் டொலர்களுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ள இந்த தேவையற்ற போரினால் ஏற்பட்டுள்ள ஆயுதப் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் 60 சதவீத அமெரிக்கப் பொதுமக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள இந்தப் போர் விவகாரத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும், இது சட்டமாவதற்கு வெள்ளை மாளிகையில் ஒரு இறுதிச் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டமூலங்களைத் தடுத்து நிறுத்தும் 'மறுப்பு அதிகாரம்' (Veto Power) ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தனது இராணுவ அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் இந்த புதிய தீர்மானத்தை முடக்குவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவார் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes