International04 June 2026

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா ‘சென்று கைப்பற்றும்' - டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட உடனே, உலக வர்த்தகத்தின் முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணை "உடனடியாக" மீண்டும் திறக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்த நீர்வழியை மீண்டும் திறக்கும் விவகாரத்தை, லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் மோதல்களில் இருந்து முற்றிலும் பிரித்து கையாளுவதற்குத் தான் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லெபனானில் திட்டமிட்டபடி இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனான் மீது தொடர்ந்து கடுமையான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

மத்திய கிழக்கில் இவ்வாறானதொரு பதற்றமான சூழல் நிலவி வரும் பின்னணியில், ஹோர்முஸ் நீரிணை குறித்துக் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், "அது மிக விரைவாகத் திறக்கப்படும்" என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா ‘சென்று கைப்பற்றும்’ எனவும் ட்ரம்ப் கூறுகிறார்.

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​“நான் அதைக் கைப்பற்ற விரும்புகிறேன்,” என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.

அதைச் செய்வதற்கான “உபகரணங்கள்” அமெரிக்காவிடமும் சீனாவிடமும் மட்டுமே உள்ளன என்று அவர் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

“நாங்கள் சென்று அதைக் கைப்பற்றுவோம்,” என்று ட்ரம்ப் கூறினார்.

இதேவேளை, ஈரானுடன் எட்டப்படக்கூடிய சாத்தியமான புதிய உடன்படிக்கை குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த உடன்படிக்கை இந்த வார இறுதிக்குள் சாத்தியமாகலாம் என்று எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

"இது நடக்காமலும் போகலாம், யாருக்குத் தெரியும்? ஆனால், ஒருவேளை இந்த உடன்படிக்கை சாத்தியமானால், அது இந்த வார இறுதிக்குள்ளேயே நடந்து முடிந்துவிடலாம். ஏனெனில், நீங்கள் ஈரானைக் கையாளும் போது எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்," என ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அண்மைக் காலமாக நிலவி வந்த கடுமையான தந்திரோபாய மற்றும் இராணுவப் பதற்றங்களுக்கு மத்தியில், ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள இந்த சாதகமான அறிவிப்பு சர்வதேச மட்டத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes