International04 June 2026

14 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை: சிற்றூந்து ஓட்டுநர் கைது

திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது பானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சிற்றூந்து ஓட்டுநரைப் பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது தோழியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போது, தோழியின் தாயார் வெளியூர் செல்வதற்காக வாடகைக்கு சிற்றூந்து ஒன்றை வரவழைத்துள்ளார்.

குறித்த சிற்றூந்தின் ஓட்டுநர் , சிறுமியிடம் நயமாகப் பேசி அவரைத் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்குக் கட்டாயப்படுத்தி மது ஊட்டி கொடுத்து, பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி சுயநினைவின்றி மதுபோதையில் கீரைக்கடை பகுதியில் விழுந்து கிடந்துள்ளார். அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்ட சிறுமி, தற்போது மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், சிற்றூந்து ஓட்டுநரை தேடிப் பிடித்துச் சரமாரியாகத் தாக்கி காவல்துறையில் ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes