General10 June 2026

"சபையை விட்டு வெளியேற்றுவேன்!" - நாடாளுமன்றில் சுஜீவவுக்கு சபாநாயகர் விடுத்த அதிரடி எச்சரிக்கை

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பாக சபாநாயகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கும் இடையே இன்று சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதுடன், சுஜீவ சேனசிங்கவை சபையை விட்டு வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிரதமரிடம் துணைக்கேள்வி எழுப்ப முற்பட்ட போதே இந்த மோதல் வெடித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ,

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 38(7) இன் படி, பிரதமரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்குப் பதிலளிக்கப்பட்டதன் பின்னர், மற்றுமொரு உறுப்பினரின் அனுமதியுடன் மேலதிக துணைக் கேள்விகளை எழுப்ப முடியும் என ஆங்கிலத்தில் வாசித்து சபாநாயகரிடம் வாதிட்டார்.

எனினும், இதனை ஏற்க மறுத்த சபாநாயகர், இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்க முடியும் எனத் திட்டவட்டமாகக் கூறினார். "பத்து கேள்விகள் வரை கேட்க முடியும் என்று நினைத்துக் கொண்டு இந்த நாடகத்தை ஆட வேண்டாம், அமருங்கள்" என சுஜீவ எம்பியை சபாநாயகர் சாடினார்.

இந்த விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறுக்கீடு செய்து சபாநாயகரின் முடிவுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பினார். இந்நிலையில் சபாநாயகர் சுஜீவ சேனசிங்கவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

"நீங்கள் இந்தச் சபைக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், உங்களை நான் சபையை விட்டு வெளியேற்றுவேன்! இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்க முடியும்.

நான் உங்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன், இல்லையென்றால் உங்களை வெளியேற்றுவேன்.

சபைக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். முட்டாள்தனமாக நடந்துகொள்ள வேண்டாம்." என சபாநாயகர் சபையில் கடுமையாக எச்சரித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes