General10 June 2026

அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல் - இரு நாட்களில் 4,000 நுளம்புப் பெருக்க இடங்கள் அடையாளம்

நாடு முழுவதும் அதிகரித்து வரும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் முதலிரு நாட்களில் மாத்திரம், 3,948 இடங்களில் டெங்கு நுளம்பு பெருக்க இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (08) 14 மாவட்டங்களைச் சேர்ந்த 74 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட வேலைத்திட்டம் இன்றுடன் (10) நிறைவடைகிறது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கையின்படி,

இந்த திட்டத்தின் கீழ் கடந்த செவ்வாய்க்கிழமை (09) மாத்திரம் வீடுகள், பாடசாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் உட்பட 31,155 வளாகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவற்றில் 8,069 வளாகங்கள் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டதுடன், 1,864 இடங்களில் டெங்கு நுளம்பு பெருக்க இடங்களாக கண்டறியப்பட்டன.

இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய சூழலைப் பராமரித்த 1,079 நபர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 711 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இடங்களில் தொழிற்சாலைகள் , கட்டுமானத் தளங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் என்பன நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான சூழலைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களும் அதிக அவதானமிக்க மட்டத்தில் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes