General11 June 2026

கோப்பரேட்டிவ் லீசிங் நிறுவனத்தின் பதிவு நீக்கம்: மத்திய வங்கி நடவடிக்கை

2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதி குத்தகைச் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறு) கீழ் பதிவு செய்யப்பட்ட நிதி குத்தகை நிறுவனமான கோப்பரேட்டிவ் லீசிங் கம்பனி லிமிடெட்' (CLCL) நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு முரணாகச் செயற்பட்டமைக்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கண்காணிப்புத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட, 2010ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க நிதி குத்தகை (அறிக்கையிடல் தேவைகள்) ஒழுங்குவிதிகளுக்கு அமைய செயற்பட குறித்த நிறுவனம் தொடர்ச்சியாகத் தவறியுள்ளது.

மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கான மத்திய வங்கியின் பிரதான திட்டத்தின் கீழ் நிவர்த்திக்கப்பட வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த நிறுவனம் தவறியுள்ளது.

இதற்காகப் பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், திட்டத்துக்கு இணங்க எவ்வித திருப்திகரமான முன்னேற்றத்தையும் நிறுவனம் காண்பிக்கவில்லை. குறிப்பாக, தனது வணிக நடவடிக்கைகளின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான திட்டம் எதனையும் சமர்ப்பிக்க இந்நிறுவனம் தவறியுள்ளது.

இதனடிப்படையில், நிதி குத்தகைச் சட்டத்தின் 9(1)(f) பிரிவின் விதிகளுக்கு அமைவாக, 'கோப்பரேட்டிவ் லீசிங் கம்பனி லிமிடெட்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த பதிவுச் சான்றிதழ் 2026.06.10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நிறுவனம் புதிய நிதி குத்தகை வணிக நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுப்பதற்கான அதிகாரம் இல்லை எனப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த ரத்துச் செய்யப்பபட்ட திகதிக்கு முன்னர் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வணிக உடன்படிக்கைகளை மாத்திரம் தொடர முடியும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes