International11 June 2026

"200 கோடி சொத்து " - வாலிபரின் வலையில் விழுந்த 18 இளம்பெண்கள்

திருமண இணையத்தளம் மூலம் பல கோடி ரூபாய் சொத்து இருப்பதாகப் பொய் வாக்குறுதி அளித்து, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளம்பெண்களை ஏமாற்றிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குறித்த நபர், திருமண இணையத்தளங்களில் தனக்கு 200 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும், திருமணத்திற்குப் பெண் தேவை என்றும் பதிவிட்டுள்ளார்.

இதனை நம்பி தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பல இளம்பெண்கள் அவரைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த அவர், அவசரத் தேவை எனக் கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் இலட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.

அவ்வாறு பெறப்பட்ட பணத்தை அவர் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவருக்குப் பணம் கொடுத்த இளம்பெண் ஒருவர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய போது, அவர் நாட்களைக் கடத்தி வந்துள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண், சைபராபாத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சந்தேக நபரைக் கைது செய்ததுடன், அவரால் ஏமாற்றப்பட்ட பிற பெண்களும் முன்வந்து புகார் அளிக்கலாம் என அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே 18 இளம்பெண்கள் குறித்த நபருக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes