General19 June 2026

ஜூன் இறுதியில் எரிபொருள் மானியம் நீக்கம் - தேனீர் முதல் அனைத்தும் உயரும் அபாயம்! – தயாசிறி எச்சரிக்கை

ஜூன் மாத இறுதிக்குள் எரிபொருள் மானியம் முற்றாகக் குறைக்கப்படவுள்ளதால், சாதாரண தேநீர் முதல் நாட்டில் உள்ள அனைத்து அத்தியாவசியப் பொருட்களினதும் விலைகளும், போக்குவரத்துச் செலவுகளும் பாரியளவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

"கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி, இன்னும் மூன்று மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் நாட்டில் கையிருப்பில் உள்ளதாக எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறினார்.

ஜனாதிபதியும் நாடாளுமன்றத்திற்கு வந்து, மூன்று மாதங்களுக்குப் போதுமான எரிபொருள் உள்ளதால் யாரும் அச்சமடையத் தேவையில்லை என உறுதியளித்தார்.

ஆனால், அந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் அரசாங்கம் பலமுறை எரிபொருள் விலையை பெருமளவில் உயர்த்தியது. உலக சந்தையில் ஒரு பீப்பாய் எரிபொருள் 70 டொலராக இருந்தபோது, குறைந்த விலைக்கு வாங்கிச் சேமித்து வைக்கப்பட்ட எரிபொருளையே அரசாங்கம் அதிக விலைக்கு விற்றது.

உலக சந்தையில் விலை உயர்ந்தவுடன், இவர்களும் விலையை உயர்த்தினார்கள். இது மக்களின் பணத்தை அப்பட்டமாகச் சுரண்டும் செயலாகும்."

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பெற்ற கடன்களுக்காக 105% க்கும் அதிகமான வட்டியை நாம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போது உலக சந்தையில் எரிபொருளின் விலை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், அரசாங்கம் மீண்டும் உள்நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இந்த மோசடியான கூட்டுச் சுரண்டலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேலும் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes