General19 June 2026

சுங்கத்தில் காகிதப் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி!

இலங்கை சுங்கத்தின் 'காகிதமற்ற ஆவணச் செயலாக்க'வேலைத்திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதில் இலங்கை வர்த்தக சபை, சுங்க அனுமதி முகவர் அமைப்புகள், இலங்கை சுங்க அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சுங்க அனுமதி முகவர்கள் தங்களது சுங்கப் பதிவுகள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை காகிதப் பயன்பாடின்றி, மின்னணு முறைமையூடாகச் சமர்ப்பிப்பதற்கு வழிநடத்துவதும், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பதிவுகள் மற்றும் ஆவணங்களை இணையவழியில் (Online) ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் இலங்கை சுங்கம் தற்போது பூர்த்தி செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே, வர்த்தக சமூகம் இனிமேலும் பாரம்பரிய அச்சிடப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி சுங்கத்திற்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அனைத்து சுங்கப் பதிவுகளும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களும் காகிதமற்ற மின்னணு முறைமையூடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற தேவையை ஜனாதிபதி செயலாளர் இங்கு வலியுறுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை வர்த்தக சபையின் பிரதிநிதிகள், இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைந்து தமது உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களைச் செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல், இந்த புதிய முறைமையால் தமது சில உறுப்பினர்களிடையே வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சம் நிலவுவதாக சுங்க அனுமதி முகவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும், உண்மை நிலை என்னவெனில், இந்த டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் அவர்களின் சேவைகளை மேலும் தொழில்முறை மற்றும் திறமையான மட்டத்திற்கு உயர்த்த முடியும் என்பதால், இந்த வேலைத்திட்டத்தை விரைவாகச் செயற்படுத்துவதற்குத் தங்களது முழு ஆதரவையும் வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

காகிதப் பயன்பாடின்றி சுங்கப் பதிவுகள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் போது, அந்த ஆவணங்களுக்கு டிஜிட்டல் கையொப்பங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இந்த டிஜிட்டல் கையொப்பங்கள் 'LankaSign' நிறுவனத்தினால் வழங்கப்படுகின்றன.

இதற்கமைய, அனைத்து இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சுங்க அனுமதி முகவர்கள் முதற்கட்டமாக இந்த டிஜிட்டல் கையொப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அது குறித்த தகவல்கள் மற்றும் அதனைச் செயற்படுத்தும் முறைமை தொடர்பாக 'LankaSign' நிறுவனத்தின் பிரதிநிதிகளால் இதன்போது விசேட விழிப்புணர்வு ஊட்டப்பட்டது.
Related recommendation
Hiru TV News | Programmes