General21 June 2026

அபேக்ஷா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இளநீர் விநியோகத்தில் கட்டுப்பாடு

மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்காக தினசரி ஏற்பாடு செய்யப்பட்டு வந்த இளநீர் விநியோக வேலைத்திட்டத்தினால் ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீர்கேடுகள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, அந்தச் செயன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவமனைப் பணிப்பாளர், விசேட மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவமனைக் குழுவினருடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அபேக்ஷா மருத்துவமனை விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கிய காரணங்களுக்காக இந்த விநியோக முறையை ஒழுங்குபடுத்த மருத்துவமனை நிர்வாகம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான முக்கிய காரணங்களாக ,

வெளிநபர்கள் எந்த வித பாதுகாப்பு முகக்கவசங்களோ அல்லது கையுறைகளோ அணியாமல் தன்னிச்சையாக மருத்துவமனை விடுதிக்குள் நுழைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள புற்றுநோயாளர்களின் ஆரோக்கியத்திற்கு இது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் தனியுரிமைக்குத் குந்தகம் விளைவிக்கும் வகையில், அவர்களின் அனுமதி இன்றி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இருப்பினும், மருத்துவமனையில் உள்ள நோயாளர்களின் தினசரி இளநீர்த் தேவை 100 முதல் 200 வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கொடையாளர்கள் இந்தத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, இளநீர்களை உணவுப் பொறுப்பதிகாரி ஊடாக மருத்துவமனையின் பிரதான சமையலறையில் மாத்திரம் ஒப்படைப்பதற்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes