General23 June 2026

தலவத்துக்கொட உடற்பிடிப்பு நிலைய முற்றுகை: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கொழும்பின் புறநகர் தலவத்துகொட பகுதியில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் அண்மையில் காவல்துறையினர் நடத்திய சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட பெண்களின் அடையாளங்கள் சட்டவிரோதமான முறையில் வெளிப்படுத்தப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, சட்டத்தரணிகள் மற்றும் லங்கா உடற்பிடிப்பு சங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்துள்ளனர்.

பொது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சங்கத்தினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் நடத்தை குறித்து ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் சந்தேகநபர்கள் மாத்திரமே என்றபோதிலும், நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் அவர்கள் பொதுவெளியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுசந்த குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் படி, எந்தவொருவரும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை நிரபராதியாகவே கருதப்படுவார்.

இந்த பெண்களின் முகங்களையும் அடையாளங்களையும் பொதுவெளியில் காட்சிப்படுத்துவது அவர்களை அவமதிக்கும் செயலாகும்.

எனவே இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலியுறுத்திய அவர், பெண்களின் உரிமைகளை மீறும் வகையில் காவல்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே செயற்பட்டுள்ளனரா என்பதை கண்டறியுமாறு காவல்துறையிடமும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அண்மையில் நடத்தப்பட்ட, இந்த சோதனைகளின் போது 34 பெண்கள் உட்பட 43 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes