General23 June 2026

தேசிய மீலாத் விழா அழைப்பிதழ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை கேள்வி – குறைபாடுகளை நிவர்த்திக்க அரசாங்கம் உறுதி!

தேசிய மீலாத் விழாவுக்கான அழைப்பிதழ்களை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதில் கடந்த காலங்களில் பாரிய குறைபாடுகளும் இழுபறிகளும் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எம்.எஸ். உதுமாலெப்பை,

கடந்த 2025ஆம் ஆண்டு அம்பலாந்தோட்டையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவின் போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

"கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி அம்பலாந்தோட்டையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவுக்கு எதிர்க்கட்சிச் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்புல்லாஹாவிற்கு மாத்திரமே தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. என்னைப் போன்ற ஏனைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

எனக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிதழ், விழா முடிவடைந்ததற்கு மறுநாளான செப்டம்பர் 6ஆம் திகதியே எனது ஊரான அட்டாளைச்சேனை அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தடைந்தது. இதற்கான அத்தாட்சிப் பத்திரங்கள் என்னிடம் உள்ளன. அரசாங்கங்கள் மாறினாலும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மதிப்பளித்து விழாவுக்கு அழைக்க வேண்டியது கட்டாயமாகும். எனவே, இனிவரும் காலங்களிலாவது கட்சி பேதமின்றி அனைவருக்கும் உரிய நேரத்தில் அழைப்பிதழ்கள் வழங்கப்படுமா?

நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க,

ஆரம்பத்தில் இம்முறை தேசிய மீலாத் விழாவை அலரி மாளிகையில் நடத்தவே திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பின்னர் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு இணங்க இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது.

தேசிய மீலாத் விழாவோடு இணைந்ததாக, தேர்வு செய்யப்படும் மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்கள், ஏனைய மத ஸ்தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களின் புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்படுவதால், இதனைப் பிரதேச மட்டத்தில் நடத்துவதே சிறந்தது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு இம்முறை கம்பஹா மாவட்டத்தில் தேசிய மீலாத் விழா நடத்தப்படவுள்ளது.

"கடந்த வருடம் ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் தேசிய மீலாத் விழா மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்துவதிலும் அழைப்பிதழ்களை வழங்குவதிலும் குறைபாடுகள் அல்லது தாமதங்கள் ஏற்பட்டிருந்ததை ஏற்றுக்கொள்கிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை சுட்டிக்காட்டிய அக்குறைபாடுகள் இம்முறை நிச்சயமாகத் திருத்திக்கொள்ளப்படும். இம்முறை நடைபெறும் விழாவில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வித அரசியல் பேதமுமின்றி, கௌரவமான முறையில் கலந்துகொள்ளக்கூடியவாறு அனைத்து ஏற்பாடுகளும் அழைப்புகளும் முறையாக முன்னெடுக்கப்படும்." என பிரதி  அமைச்சர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes