General24 June 2026

போதைப்பொருள் கைது நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரிகளுக்கு இடையூறு: ஒருவர் கைது

குருநாகல் - கொட்டவெஹெர பகுதியில் போதைப்பொருள் தொடர்பான கைது நடவடிக்கையின் போது, காவல்துறை அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த காட்சிகள் அடங்கிய காணொளியைச் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பலுகொல்ல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கடந்த மே 16 அன்று, கொட்டவெஹெர காவல்துறையினர் பலுகொல்ல பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் 19 மற்றும் 28 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மகாஉஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மே 17 அன்று நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள், மே 21 ஆம் திகதி குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தலா 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் சட்டவிரோதமாக ஒன்றுகூடி, கடமையிலிருந்த அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தையும் காணொளியாக பதிவு செய்துள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பான காணொளி, தெரணியகல காவல்துறை பிரிவில் நடந்த மற்றுமொரு சம்பவத்துடன் தவறாகத் தொடர்புபடுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நிக்கவெரட்டிய காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, காணொளியைப் பதிவு செய்து பரப்பிய ஐந்து பேரில் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

எஞ்சிய நான்கு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிக்கவெரட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes