General25 June 2026

இந்திய உதவியிலான மலையக வீடமைப்புத் திட்டம்: இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்ய உத்தரவு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4,700 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்புத் திட்டத்தை, இந்த ஆண்டின் இறுதிக்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் நடைபெற்ற, இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், அனர்த்த அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 2,026 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக வீடுகள் வழங்கப்படவுள்ளன.

மீதமுள்ள வீடுகள் பெருந்தோட்டத் துறையில் பணியாற்றும் தகுதியான தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 22 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனவசம மற்றும் எல்கடுவ பெருந்தோட்டங்களின் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் இந்த வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் இந்திய அரசாங்கம் 2.8 மில்லியன் ரூபாவையும், இலங்கை அரசாங்கம் 4 இலட்சம் ரூபாவையும் நிதிப் பங்களிப்பாக வழங்கியுள்ளன.

இந்த நிலையில், வீடமைப்பிற்காக அடையாளம் காணப்பட்ட காணிகளைத் தாமதமின்றி விடுவிக்குமாறும், பொருத்தமான ஏனைய காணிகளை அடையாளம் காண்பதற்குத் தேவையான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes