General26 June 2026

வவுனியாவில் 21 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது: வாகனங்களும் மீட்பு

வவுனியா, லக்ஷபான வீதிக்கு அருகில் நேற்று (25) இடம்பெற்ற சுற்றிவளைப்பில், 21 கிலோ 600 கிராம் கேரளக் கஞ்சாவைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் வவுனியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த சிற்றூந்து ஒன்றில் இருந்த கஞ்சா பொதிகளை முச்சக்கரவண்டி ஒன்றிற்கு மாற்றும் போது, காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவருடன் இருந்த மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ 600 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சிற்றூந்து மற்றும் முச்சக்கரவண்டி ஆகியனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதோடு, தப்பிச் சென்றவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes