General28 June 2026

3 வாரங்களாகத் தொடரும் உணவு தவிர்ப்பு: இருதய நோய் பிரிவில் சிகிச்சை; ஜனாதிபதியே உயிருக்கு பொறுப்பு என சலே கடிதம்!

திடீரென ஏற்பட்ட இருதய நோய் நிலைமை காரணமாக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே பரிசோதனைக்காக இன்றைய தினம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் இருதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சுமார் மூன்று வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, மேலதிக பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையின் இதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் சம்பத் இந்திரிக குமார தெரிவிக்கையில், மேலதிக பரிசோதனைகளுக்காக சுரேஷ் சலே மீண்டும் இன்று மாலை இதய நோய் பிரிவிலேயே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இன்று மருத்துவமனைக்கு வருகை தந்து சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த அவரது மனைவி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

"இன்று காலை சுரேஷுக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி காரணமாக அவர் இதய நோய் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனைகளின்படி அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்கள் என்ன கூறினாலும், அவரது உண்மையான உடல்நிலையை உள்ளே இருக்கும் மருத்துவர்கள் மட்டுமே அறிவார்கள். அவர் நல்ல ஆரோக்கிய நிலையில் இல்லை.

அதிகாரிகள் அனைவரும் சுரேஷ் சலே உயிரிழக்கும் வரையில் காத்திருக்கின்றனர்.

தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு ஜனாதிபதியும், ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர உள்ளிட்ட சில அதிகாரிகளுமே பொறுப்பேற்க வேண்டும் என சுரேஷ் கடந்த புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக சட்டத்தரணிக்கு அறிவித்துள்ளார்.

விசாரணைகளைத் தொடர்ந்து நடத்துமாறு நாங்கள் கூறுகிறோம். ஆனால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோருகிறோம். தற்போதைய நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருகிறது.

எனினும், சுரேஷ் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை எக்காரணம் கொண்டும் கைவிடப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார்” என சுரேஷ் சலேவின் மனைவி தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes