General28 June 2026

முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் : ரசிகர்களை உருக்கிய பதாகை!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73), திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று (27) சென்னை நகரில் காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகம், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது திரைத்துறைக்கான மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இன்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் சென்று மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை சார்பில் துப்பாக்கி வேட்டு மரியாதை செலுத்தப்பட்டதையடுத்து, அவரது உடல் நுங்கம்பாக்கம் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்தை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.

இறுதி ஊர்வல வாகனத்தின் முன்பகுதியில் "அன்புடன் பாக்யராஜ்" என்ற வாசகத்துடன் அவரது கையெழுத்து இடம்பெற்றிருந்த பதாகை வைக்கப்பட்டிருந்தது. வழிநெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் மலர்தூவி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 11 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில், அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'தாவணிக் கனவுகள்', 'சின்ன வீடு' உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான முத்திரை பதித்த கே. பாக்யராஜ், 'திரைக்கதை மன்னன்' என ரசிகர்களாலும் திரையுலகினராலும் போற்றப்பட்டவர். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes