General28 June 2026

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: அரசாங்கம் தீவிர பரிசீலனை

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான முறையான பொறிமுறையை உருவாக்குவது குறித்தும், மாகாணசபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாகவும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பல்வேறு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்வது தொடர்பான யோசனைகளை அமைச்சரவை ஆராய்ந்து வருகிறது.

குறிப்பாக, வெளிநாட்டுத் தூதரகங்களில் நேரில் வாக்களிக்கும் முறை அல்லது டிஜிட்டல் முறையில் வாக்களிக்கும் முறை குறித்த ஆலோசனைகள் அமைச்சரவை உபகுழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் செயல்முறையில் எவரும் விடுபடாத வகையில் அனைவரையும் உள்ளடக்கிய பொறிமுறையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாணசபை தேர்தல்களை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்து கலந்துரையாடி வருகிறது.

இருப்பினும், தேர்தலை நடத்துவதற்கான சட்டரீதியான தெளிவின்மை காரணமாக இந்த தேர்தல்களை இந்த ஆண்டு நடத்துவதில் சிக்கல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில், தெரிவுக்குழுவின் பணிகள் மந்தமாக இருப்பதாகவும், அரசாங்கம் முடிவெடுப்பதற்கு மேலதிக கால அவகாசம் கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பழைய விகிதாசார முறைமையின் கீழ் தேர்தல்களை நடத்துமாறும், பெண்களுக்கு மற்றும் இளைஞர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான அடுத்தகட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூட்டம் எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes