General30 June 2026

குடிநீர் விநியோக நிறுவனம் என்ற போர்வையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

கடுவலை, சுதர்ஷன மாவத்தையில் உள்ள குடிநீர் விநியோக நிறுவனம் என்ற போர்வையில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றினை, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனையின் போது, சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 18,575 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் மொத்த கொள்ளளவு 3,345.5 லீற்றர்களாகும்.

இவற்றுடன், வெளிநாட்டு மதுபானம் என பெயரிடப்பட்ட நான்கு, ஒரு லீற்றர் போத்தல்களும், 750 மில்லி போத்தலும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் சோதனையின் போது, மதுபான தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட எத்தனோல் அடங்கிய போத்தல், மதுபானம் தயாரிப்பதற்கான உபகரணங்கள், 50 கிராம் 200 மில்லி கிராம் கேரளா கஞ்சா என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் 30, 43, 58, 59 மற்றும் 62 வயதுடைய ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மிகிந்தலை, மருதானை, வத்தளை, வெபடை தெற்கு, கெதாலாவ மற்றும் சிப்பிகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes