General04 July 2026

சொந்த மண்ணில் அடக்கம் செய்யவும் அனுமதி இல்லை - பாலஸ்தீன கைதிகளின் வேதனை

2025ஆம் ஆண்டு ஜனவரியில் இஸ்ரேல் - ஹமாஸ் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் விடுவிக்கப்பட்ட 229 பாலஸ்தீனர்கள் எகிப்திற்கு நாடுகடத்தப்பட்டனர்.

நீண்ட சிறைவாசத்திற்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், இஸ்ரேலின் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இவர்களால் மேற்கு கரையில் உள்ள தங்களது குடும்பத்தினருடன் இணைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் சிறையிலிருந்த 48 வயதுடைய அம்ஜத் அல்-நஜ்ஜார், 22 ஆண்டுகள் சிறையிலிருந்த 51 வயதுடைய அகமது ஹமீத் ஆகியோர் எகிப்தில் முடங்கியுள்ளனர்.

இவர்கள் சிறையிலிருந்த காலத்தில் ரகசியமாகக் கடத்தப்பட்ட விந்தணுக்கள் மூலம் பிறந்த இவர்களது பிள்ளைகள், தங்களது தந்தையரைத் தொலைபேசி வாயிலாக மட்டுமே அறிந்துள்ளனர்.

அகமது ஹமீத்தின் 10 வயது மகள் புஷ்ரா, கடந்த மார்ச் மாதம் எகிப்திற்குச் சென்று தந்தையை நேரில் சந்தித்துவிட்டு மேற்கு கரைக்குத் திரும்பிய போது, இஸ்ரேலிய உளவுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

23 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு எகிப்திற்கு நாடுகடத்தப்பட்ட ரியாத் அல்-அமூர் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பால் காலமானார்.

எனினும், அவரது உடலை சொந்த ஊரான மேற்கு கரைக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்ய இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளது.

பாலஸ்தீன கைதிகள் சங்கத்தின் தகவல்படி, 2025ஆம் ஆண்டு கைதிகள் பரிமாற்றத்தின் போது 383 பேர் மேற்கு கரையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

'ஹுரியத்' அமைப்பின் ஆவணங்களின்படி, 2014 முதல் 2025 வரை பாலஸ்தீனர்களுக்கு எதிராக 8,700க்கும் அதிகமான பயணத் தடைகளை இஸ்ரேல் விதித்துள்ளது.

இந்த விடயம் குறித்து 'அல்-ஹக்' மனித உரிமை அமைப்பின் இயக்குனர் ஷவான் ஜபாரின் கூறுகையில், "இத்தகைய கட்டாயப் பிரிப்பு கொள்கையானது சட்டப்பூர்வமாக ஒரு 'கூட்டுத் தண்டனை' ஆகும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு எந்தவித தடையுமின்றி பயணிக்க உரிமை உண்டு. இஸ்ரேல் எந்தவொரு நியாயமுமின்றி இக்குடும்பங்களைத் தண்டித்து வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes