General05 July 2026

மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்

மேல் மாகாணத்தில் டெங்கு பரவல் அதிக ஆபத்து காணப்படும் 22 பகுதிகளை இலக்காகக் கொண்டு, இன்று (5) முதல் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் சுகாதாரத் துறை, முப்படையினர், காவல்துறையினர்,அரச நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல்படவுள்ளன.

அதன்படி, அதிக ஆபத்து மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட மஹரகம, கடுவெல, ஹோமாகம, கொத்தட்டுவ, பத்தரமுல்ல, பிலியந்தலை உள்ளிட்ட 9 மருத்துவ சுகாதார அதிகாரி பிரிவுகளிலும்,கொழும்பு மாநகர சபையின் 3 வலயங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் பியகம, களனி, சீதுவை, ஜா-எல, மஹர, வத்தளை, நீர்கொழும்பு, மினுவாங்கொடை ஆகிய 8 சுகாதார அதிகாரி பிரிவுகளிலும்,
களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை, பண்டாரகம, ஹொரணை, இங்கிரிய, களுத்துறை ஆகிய 5 சுகாதார அதிகாரி பிரிவுகளிலும்இந்த விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை அமுல்படுத்தப்படுகிறது.

இதனிடையே, நாட்டில் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளதுடன் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் தற்போது டெங்கு நோய் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளமைக்கு, டெங்கு வைரஸ் வீரியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே முக்கிய காரணம் என, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தகைய நிலைமைகள் பொதுவாக 4 வருடங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஏற்படுவது இயற்கையான ஒரு போக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்கள் தங்களது சூழலைத் தொடர்ச்சியாக சுத்தமாக வைத்திருப்பதுடன், தத்தமது பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்ற வேண்டும் என, பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சாதாரண வடிகால்கள் அல்லது கால்வாய்களை விட, வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்குள் தேங்கி நிற்கும் சுத்தமான நீரிலேயே டெங்கு நுளம்புகள் அதிகமாகப் பெருகுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாகக் கடந்த சில தினங்களாக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பகுதியை மையப்படுத்தி விசேட தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அதிக அவதானமிக்க வலயங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்து 500 வீடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த தொடர்ச்சியான வேலைத்திட்டம் காரணமாக, தற்போது குறித்த பகுதிக்குள் டெங்கு பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes