General13 July 2026

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த காவல்துறை!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி பொதுமக்களின் தனிப்பட்ட மற்றும் வங்கித் தரவுகளைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெறுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலிருந்து வருவதாகத் தோன்றும் இந்த குறுஞ்செய்திகளில், வீதிப் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தச் செய்திகளில் உள்ள சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் பொதுமக்களை மோசடிக்கு உள்ளாக்க முயற்சிப்பதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான எந்தவொரு அறிவித்தலையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுக்கவில்லை என்றும், இந்தச் செய்திகள் முற்றிலும் போலியானவை என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தியில் உள்ள இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட அல்லது வங்கித் தரவுகளை வழங்க வேண்டாம் என்றும், இத்தகைய மோசடிச் செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின், உடனடியாக அருகில் உள்ள காவல்துறை நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes