General14 July 2026

உலகை திரும்பிப் பார்க்க வைத்த இந்தியா - பாலைவனத்தில் பிறக்கும் பசுமை மின் நகரம்

இந்தியாவின் குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில் உள்ள உப்பு நிலப்பரப்பில், உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை இந்தியா உருவாக்கி வருகிறது.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், இந்தியாவின் பசுமை வலுசக்தி முன்னெடுப்பின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

குஜராத்தின் கவ்தா பகுதியில் அமைந்துள்ள இந்தத் திட்டம், வெறுமனே சூரிய மின்சக்தியை மட்டும் கொண்டிருக்கவில்லை. சூரிய மின் தகடுகள், காற்றாலைகள் , மின்கல சேமிப்பு அமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு ரோபோ தொழில்நுட்பம் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மாபெரும் பசுமை எரிசக்தி இயந்திரமாக இது செயல்படுகிறது. இதனால், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நேரத்தில் தடையில்லாத, நம்பகமான மின்சாரத்தை வழங்க முடிகிறது.

சுமார் 208 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டப்பகுதி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸை விட ஐந்து மடங்கு பெரியதும், இந்தியாவின் மும்பை மாநகரத்தின் அளவுக்கு நிகரான பரப்பளவு கொண்டதும் ஆகும். மொத்தம் 30 ஜிகாவாட் திறன் கொண்ட இந்தத் திட்டத்தில், தற்போது 9.5 ஜிகாவாட் சூரிய மின்சக்தி ஏற்கனவே தேசிய மின் கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 மார்ச் மாதம், வெறும் 12 மாதங்களுக்குள் 1 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்த அதானி நிறுவனம், தற்போது ஜூலை 2026 நிலவரப்படி தனது திறனை 9.5 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் அதானி நிறுவனத்தின் ஒட்டுமொத்த பசுமை வலுசக்தி திறன் 20 ஜிகாவாட் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.

இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடையும் போது, ஆண்டுக்கு சுமார் 81 பில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியாவின் சுமார் 1.6 கோடி வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கப் போதுமானது. காலநிலை மாற்றத்திற்கு எதிரான இந்தியாவின் போரில், இந்தத் திட்டம் உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
Related recommendation
Hiru TV News | Programmes