General14 July 2026

தேர்தல் நடத்துவதில் நிதிப் பிரச்சினை இல்லை- முறைமை மாற்றமே அவசியம் - அமைச்சர் நளிந்த

தேர்தல்களை நடத்துவதற்கு நிதி இல்லை எனத் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என அமைச்சர் நளிந்த திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி அரசாங்கத்திடம் கையிருப்பில் உள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை ஏற்படுமாயின் இடைக்கால ஒதுக்கீட்டின் ஊடாக அதனை ஈடுசெய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் நடத்துவதற்குப் பணம் தடையாக இல்லை. மாறாக, புதிய தேர்தல் முறைமையினை நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவது தொடர்பான சிக்கலே பிரதானமாக உள்ளது.

நிவாரணப் பணிகளுக்காக 500 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்தலை நடத்துவதற்கு அதிகபட்சமாக 15 பில்லியன் ரூபாவே தேவைப்படும் சூழலில், தேர்தலுக்கான நிதியை ஒதுக்க அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ, எந்தவொரு தேர்தலும் திடீரென அறிவிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ளும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. தேர்தல் முறைமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார் .
Related recommendation
Hiru TV News | Programmes