Sports15 July 2026

மெஸ்ஸியின் கனவு நனவாகுமா? இங்கிலாந்தின் வரலாறு மாறுமா?

உலகக் கிண்ண கால்பந்து தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதன்படி முதலாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய அணிகள் மோதிய நிலையில், 2-0 என்ற அடிப்படையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெய்ன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆறு போட்டிகளில் 16 கோல்களை அடித்து மிரட்டிய பிரான்ஸ் அணி, இந்த அரையிறுதியில் ஸ்பெய்னின் கட்டுக்கோப்பான ஆட்டத்திற்கு முன்னால் தடுமாறியது.

குறித்த போட்டியில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திய ஸ்பெய்ன் அணி 16 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒரு உலகக் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்தநிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள மெர்சிடிஸ் - பென்ஸ் மைதானத்தில் குறித்த போட்டி நடைபெறவுள்ளது.

வரலாற்றுப் பகை மற்றும் கால்பந்து மைதானத்தில் நிலவும் தீராத போட்டி காரணமாக, குறித்த 2 அணிகளுக்குமிடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை உலகக் கிண்ண தொடர்களில் நேருக்கு நேர் சந்திக்காத லியோனல் மெஸ்ஸி, முதன்முறையாக இங்கிலாந்து அணிக்கு எதிராகக் களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நீண்ட நாட்களாக உலகக் கிண்ண கனவில் இருக்கும் இங்கிலாந்து அணி, ஹரி கேன் மற்றும் ஜூட் பெல்லிங்ஹாம் தலைமையிலான வலுவான அணியுடன் களமிறங்குகின்றது.

நடப்பு செம்பியனான அர்ஜென்டினா, மெஸ்ஸியின் அபார ஆட்டத்தை நம்பி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குச் செல்ல ஆவலாக உள்ளது.

இதுவரை குறித்த இரு அணிகளும் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் இங்கிலாந்து அணி 6 வெற்றிகளையும், அர்ஜென்டினா அணி 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

மேலும் 5 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

வரலாறு ஒருபுறம் இருக்க, உலகக் கிண்ணத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் அர்ஜென்டினாவும், புதிய வரலாற்றைப் படைக்கும் முனைப்பில் இங்கிலாந்தும் இன்று மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes