உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளிட்ட ஏனைய நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தமது நிலப்பாட்டை வெளிப்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 7 அம்சத் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.
நேற்று (29) நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடங்கியுள்ள விடயங்கள் வருமாறு,
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தமானது, நிறுவன ரீதியிலான தேவை, வெளிப்படைத்தன்மை கொண்ட சான்றுகள், சம்பந்தப்பட்ட பங்குதாரர் தரப்புகளுடனான ஆலோசனைகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியிலான தாக்கங்கள் குறித்த முழுமையான மதிப்பீடு இன்றி முன்னெடுக்கப்படக் கூடாது.
பதவியிலிருக்கும் நீதிபதிகளின் பதவிக் காலத்தை மாற்றுவதற்குப் பதிலாக, அரசியலமைப்பு நியமனச் செயன்முறை ஊடாக தற்போதுள்ள நீதித்துறை வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வழக்குத் தாமதங்களைக் குறைத்தல், நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், நீதிமன்ற உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் மற்றும் நீதிக்கான அணுகலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த எந்தவொரு எதிர்கால மறுபரிசீலனையும், பரந்த பொதுக் கலந்தாய்வு மற்றும் சுயாதீன நிபுணர் மதிப்பீட்டைத் தொடர்ந்து விரிவான அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சீர்திருத்தச் செயன்முறையின் ஒரு பகுதியாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
நீதித்துறையின் சுயாதீனம், அதிகாரப் பகிர்வு, சட்டவாட்சி, அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி மற்றும் இலங்கை நீதி முறைமையின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பை சங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் தேவையான அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
அரசிலமைப்பு ரீதியிலான தேவைகள், பரந்த கலந்தாய்வுகள் மற்றும் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக இல்லாத பட்சத்தில், பதவியிலிருக்கும் நீதிபதிகளின் பதவிக் காலத்தைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்களை முன்னெடுக்க வேண்டாம் என ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
நாசா செயற்கைக்கோள் படப்பிடிப்பில் சிக்கிய விசித்திரம் : விஞ்ஞானிகளின் அவசர எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டங்கள்
ஆகஸ்ட் 3 ஆம் திகதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அமெரிக்கா - ஈரான் பதற்றம்: போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர அழைப்பு!
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்
விஜய் ரசிகர்களுக்காக களமிறங்கிய மீஷா கோஷல்!
வானூர்தியில் த்ரிஷா செய்த காரியம் - இணையத்தில் வைரலாகும் நிழற்படம்!
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் அஜிங்கிய ரஹானே!