International13 August 2026

நிலவில் நிரந்தர மையம்: இஸ்ரோவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்புவிடுத்த நாசா!

நிலவில் மனிதர்களைத் தரையிறக்கி, அங்கு நிரந்தர குடியிருப்பு அமைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மூன் பேஸ்’ (Moon Base) திட்டத்தில் இணையுமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு (ISRO) அமெரிக்காவின் நாசா (NASA) அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இந்தியா - அமெரிக்க சிவில் ஸ்பேஸ் கூட்டுக் பணிக்குழுவின் 9 ஆவது கூட்டத்தில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஆர்டெமிஸ் ஒப்பந்தங்களின்' (Artemis Accords) கீழ் அறிவியல் தரவுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் மேலும் முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட கூட்டுத் திட்டமான 'நிசார்' (NISAR) செயற்கைக்கோள் வெற்றி மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டமை போன்ற திட்டங்களைத் தொடர்ந்து, இரு நாடுகளின் விண்வெளி உறவு மேலும் வலுவடைந்துள்ளது.

அமெரிக்கா தனது 'ஆர்டெமிஸ்' திட்டத்தின் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதனைத் தரையிறக்க இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes