General17 August 2026

கஞ்சாவை பறிமுதல் செய்து உலர்த்தக் கொடுத்த காவல்துறை: நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிரடி கைது நடவடிக்கை!

தணமல்வில, தெமோதர வௌ பகுதியில் உள்ள கஞ்சா தோட்டமொன்றை முற்றுகையிட்டு, அதன் உரிமையாளரிடம் 5 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்ததாகக் கூறப்படும் மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 4 காவல்துறை அதிகாரிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி குறித்த கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட 6 பேர் கொண்ட காவல்துறை குழு, கஞ்சா பயிர்களில் ஒரு சிறு பகுதியை மாத்திரம் அழித்துவிட்டு, எஞ்சிய கஞ்சா பயிர்களை எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை உலர்த்துவதற்காக ‘களு’ என அழைக்கப்படும் நபரிடம் ஒப்படைத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி தணமல்வில தலைமையக காவல்துறை பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கஞ்சா தோட்ட உரிமையாளரும், அரச புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கஞ்சாவை உலர்த்தியதாகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நீதிமன்ற தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர், இரண்டு காவல்துறை சார்ஜன்ட்கள், ஒரு சாரதி மற்றும் ஒரு காவல்துறை கொன்ஸ்டபிள் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்
Related recommendation
Hiru TV News | Programmes