General20 August 2026

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: அடுத்த மாதம் சோதனையோட்டம் ஆரம்பம்!

இலங்கையில் பயணிகள் ட்ரோன் (Passenger Drone) சேவையை அடுத்த மாதம் சோதித்துப் பார்க்கத் திட்டமிட்டுள்ளதுடன், அடுத்த 6 மாதங்களுக்குள் வர்த்தக ரீதியிலான சேவைகளைத் தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

முதற்கட்டத் திட்டத்தின் கீழ், இந்த பயணிகள் ட்ரோன்கள் 25 கிலோமீற்றர் தூரம் வரை பயணங்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளதுடன், சுற்றுலாத் தலங்களை இலக்காகக் கொண்ட இரண்டு வான்வழி மார்க்கங்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முன்னோடித் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளாக கொழும்பிலிருந்து தெற்கு கடலோரப் பகுதி வரையிலும், கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து கொழும்பு துறைமுக நகரம் (Port City) வரையிலும் வான்வழி மார்க்கங்களை அமைப்பதில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டு ட்ரோன் வானூர்திகள் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன், திட்டத்தின் முதல் இரண்டு மாதங்களில் பயண மார்க்கங்களுக்கான விரிவான வரைபடங்கள் தயாரிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவசரகால அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை, கடல்சார் பயன்பாடுகள் மற்றும் கடற்படைத் தேவைகளுக்காகவும் இதனைப் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

இந்த வகை ட்ரோன்கள் தரையிறங்குவதற்கும் வானேறுவதற்கும் மிகக் குறைந்த இடமே போதுமானது என்பது இதன் முக்கியமான சிறப்பம்சம் எனச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், ஆரம்ப சோதனைகளைத் தொடர்ந்து 6 மாத காலத்துக்குள் நாட்டில் வர்த்தக ரீதியிலான பயணிகள் ட்ரோன் சேவையை முறைப்படியாக நிறுவ அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes